Skip to main content

கற்பனை வாழ்க்கை



எட்டு வருடங்கள் ஆகிறது நான் என் ஊரை விட்டு வேற்றூரில் தஞ்சம் புகுந்து.கடந்து போன எட்டு வருடத்தில் சொந்தங்கள் கடந்து நினைவில் வைத்து கொள்ளும்படி நிறைய நண்பர்கள் மட்டுமே சொந்தமாய் உடனிருந்திருக்கின்றனர்.
பதின் பருவத்தில் பதினொன்றாம் வகுப்பில் தொடங்கிய விடுதி வாழ்க்கை இன்றளவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பத்தாம் வகுப்பு விடுமுறை முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில் ராஜாவாய் வலம் வந்த எனக்கு , விடுதி வாழ்க்கை புதிமையான அனுபவம் தான்.
தினமும் காலையில் "தம்பி , மணி 7 ஆக போகுது சீக்கிறம் எந்திருச்சு கிளம்பு" என்ற வார்த்தையில் தொடங்கி , சூடான இட்லியை ஊட்டிவிட்டு வழி அனுப்பவது வரை அனைத்துமே இன்றும் டைம் மெஷின் இருந்தால் நான் போக துடிக்கும் சுகமான நாட்கள்.
விடுதி வாழ்க்கை இவ்வன்பிற்க்கு நேர் எதிர். இரண்டடுக்கான இரும்பு கட்டிலில் சுகமின்றி உறங்கும் எங்களை , எழுப்ப தினமும் அதிகாலை 4 மணிக்கே பிரம்புடன் வந்துவிடுவார். எங்களை காக்கும் conjuring தெய்வம்.
பின் வரிசையில் நின்று அரைகுறையாய் குளித்து சரியாக 5 மணிக்கு படிக்கும் அறைக்குள் ஆஜராக வேண்டும்.
பிணவறைக்குள் கை கால் அசைக்காத பிணங்கள் எப்படி உள்ளதோ அதே நிலமை தான் அந்த படிக்கும் அறைக்குள்ளும்.
புத்தகத்தை பார்த்தபடி அதிகாலையிலே சிலை போல் அமர்ந்திருப்போம்.
பத்தாம் வகுப்பு வரை அம்மாவின் உணவை கழுவி ஊற்றிய எனக்கு அந்த கடவுள் கொடுத்த சாபம் தான் விடுதி உணவு. சுவையென்றால் சுவை அப்படி ஓர் சுவை வாயில் வைத்தவுடன் காரி உமிழும் படி இருக்கும்.
பிறகு நாட்கள் நகர அதுவே பழகி விட்டது. இதில் அவ்வப்போது சிறைக்குள் இருக்குள் கைதிகள் தப்பித்து செல்லும் காட்சிகளும் அரங்கேறும்.
வீட்டிற்க்கு செல்லும் அந்த இரண்டு நாட்களுக்கு இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்.
அப்பாடா என்று ஒரு வழியாய் இரண்டு மாதம் கழித்து வீடு சென்றால்.
அரவணைக்காத உறவுகள் எல்லாம் வரிசையில் நின்று கொண்டு மங்கலம் பாடும்.
தொடக்கத்தில் பாசத்திற்க்கும் ,ஏக்கத்திற்க்கும் ஆசைப்பட்ட மனது , நண்பர்கள் என்ற வட்டத்திற்க்குள் அனைத்தையும் மறந்தது.
பண்ணிரெண்டாம் வகுப்பில் சொல்லவே தேவை இல்லை , பாட புத்தகங்கள் தான் உன் உலகம் என்ற அளவிற்க்கு என்னை சிலையாய் வடித்திருந்தனர் என்னை செதுக்கிய சிற்பிகள்.
பிறகு , தேர்வுகள் முடிந்த ஒரு 4 மாதம் பாடப்புத்தகங்கள் இல்லா ஓர் சுதந்திர விடுவிப்பு , அப்போதும் பாசங்கள் மறைந்து அக்கறை என்ற புதிய சொல்லிற்க்குள் அடுத்த விடுதியை தேட முழுமூச்சாய் இறங்கினர் என்னை சூழ்ந்தவர்கள்.
நல்ல வேளையாக டி.வி யும் , கிரிக்கெட்டும் என் தலைமுறையில் நான் வாங்கி வந்த வரங்கள்.அது மட்டும் இல்லையென்றால் நிச்சயம் சேது விக்ரம் ஆக இங்கு பல பேர் சுற்றி திரிந்திருப்பார்கள்.
பிறகு , கல்லூரி விடுதி பள்ளி விடுதிக்கான சில கட்டுபாடுகளை தவிர்த்து , இரண்டாம் வருடத்தின் துவக்கத்திலேயே வீட்டில் சண்டைப்போட்டு விடுதிக்கு முற்றுப்புள்ளி வைத்து , இளமையின் துள்ளலுக்கு முதல் புள்ளி வைத்து வெளி அறையில் தஞ்சம் புகுந்தேன்.
நாட்கள் நகர கொஞ்சம் மனமும் தெளிந்தது. இதுதான் நிசர்சன வாழ்க்கையென்று. பின் வேலை , அவ்வப்போது ஊர் சென்று பார்க்கும் அம்மா , அப்பா முகம்.
தினமும் போனில் அரை மணி நேரம் பேசினாலும் , தோனும் போது ஊர் சென்று அவர்களின் முகம் பார்த்தாலும்.
கடந்து போன இந்த எட்டு வருடத்தில் சின்ன சின்ன நிகழ்வுகளும் , அவை தரும் மிகப்பெரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துர்பாக்கியசாலியாய் துலைத்தவர்கள் வரிசையில் கடைசியில் நிற்பவன் நான்.
இங்கு என்னை கடந்து செல்லும் பல உயிர்களும் என்னை போல் இதே வரிசையில் என்னை முந்திக்கொண்டு நிற்பவர்கள் தான்.
சொந்த ஊரில் படித்து சொந்த ஊரிலேயே வேலை செய்யும் உயிர்கள் உண்மையில் வரம் பெற்ற பாக்கியசாலிகள் தான்.
டைம் மெஷின் இருந்தால் , மீண்டும் சொந்த ஊரில் , சிறு குழந்தையாய் அம்மாவுடன் , அப்பாவுடன் , தங்கையுடன் என்னை எப்பொழுதும் சூழும் நண்பர்களுடன் ஓர் வாழ்க்கை வாழ வேண்டும் கற்பனையிலாவது..

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...