இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன்.
அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன்.
கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம்.
கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது.
பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது.
பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண்ணை போல ஆசையில் அணைத்து கொள்ளும் இந்த அகங்காரம் கொண்ட அபார்ட்மெண்ட்.
பலியான பல ஆடுகள் தான் பலியானதை கூறி பெருமையில் திளைக்க இன்னும் பல ஆடுகளும் தேடி சென்று தலையை கொடுக்கும்.
இதில் இன்னொரு அல்டிமேட் காமெடி என்னவென்றால் அபார்ட்மெண்டை வாங்கும் செலவை விட அதை சீவி சிங்காரிக்கும் செலவு தான் மூச்சடைக்க வைக்கும்.
அந்த காசிற்கு மோடியின் ஆடையில் பாதியை விலைக்கு வாங்கி விடலாம்.
சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் , இப்படி சீவி சிங்காரித்த அழகு அபார்ட்மெண்ட்களில் என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்தால் , டாஸ்மாக் ஓரம் வாந்தியில் குளித்திடும் வாயிற் காவலன் போல, சில நேரம் அழுகை சத்தம் உச்சம் பெற , பல நேரம் பல எச்.ராஜாக்கள் நானும் ரவுடி தான் என்ற தொனியில் புது அவதாரம் எடுப்பர்.
புறம் காட்டி பழக சொல்லிடும் புத்துயிர் கட்டிடங்களுக்குள் , பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறியாமல் வாழ சொல்வதே இந்த கலிகால வாழ்க்கை.
ஓடி திரிய வேண்டிய வயதில் ஓய்வெடுக்கும் அவலமெல்லாம் இதுபோன்ற அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தால் ஊடுறுவி இப்போது ஸ்லீப்பர் செல்லாய் பரவிக் கொண்டிருக்கிறது.
பணம் தரும் ஆசையில் ஓடித் திரிவோர் எண்ணிக்கை அதிகமாகி , காலப்போக்கில் அது மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறியுள்ளது.
பராம்பரிய வீட்டை இடித்து விட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் தான் பேரழகு என நினைக்கும் மேதாவிகளிடம் வேறு எதை எதிர்பார்ப்பது.
வேறு வழியின்றி இதில் தான் இருந்தாக வேண்டும் , வாடகையாய் 2000 ரூபாய் கொடுத்த காலம் கடந்து 20,000 ரூபாய் கொடுத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எல்லாம் உலகமயமாக்கலின் உச்ச கட்டம்.
விலைவாசி உயர்வின் முப்பாட்டன் இந்த நாகரீக கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு அதில் ஓடி திரியும் ஓர் கருப்பு ஆடாய்.
Comments
Post a Comment