பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வுகளை முடித்த நாளிலிருந்து, வீட்டிற்குள்ளும் சரி வெளியிலும் சரி அடுத்த என்ன படிக்கலாம் என்ற பேச்சை மீறி அடுத்து எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்ற பேச்சே ஆஸ்தானமாக விவாத பொருளாக மாறிக் கொண்டிருந்தது.
எனக்கோ எந்த கல்லூரி என்பதை தாண்டி எந்த ஊரில் படிக்கலாம் என்ற சிந்தனை வெறித்தனமாக ஆழ் மனது வரை சென்று குடைந்து கொண்டிருந்தது.
எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களின் Bio-Data - வை முழுதும் எடுத்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தேன். தெரியாத ஒரு விஷயத்தையும் தெரிந்தது போல் காட்டி பெற்றோர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் நாம். அதில் ஒரு அலாதி சுகம்.
நான் தேர்ந்தெடுத்த அந்த இரண்டு ஊர்கள் சென்னையும் கோயம்புத்தூரும் , அதில் என்னை அறியாமலையே நடந்த ஒரு சுவாரசியம், பாண்டிச்சேரியை நான் அதுவரை அறிந்திறாத என் சொந்தக்காரர் Refer செய்தது தான். சொந்தங்களிலும் சில நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.
பிறகு , சென்னை மோசன ஊர் என்று என் மீது அக்கறை கொண்ட ,உறவினர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் விஷப்பூச்சிகள் கொளுத்தி போட , சென்னையும் ஓரங்கட்டப்பட்டது.
பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் காட்சிகள் போல ஒரே விரலை காட்டி கோயம்புத்தூரில் தான் படிக்க வேண்டும் என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரி நாம் தேர்ந்தெடுத்தது தானே, என்று சந்தோஷத்தில் திளைக்க , அடுத்த ஆப்பு ரெடி ஆனது. கட்டுப்பாடான கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து ஊளையிட , மீண்டும் கல்லூரிக்கான Bio-Data - வை எடுத்து பெற்றோரை மூளைச்சலவை செய்து ஒரு வழியாக கல்லூரி வாழ்க்கையை ரசித்து வாழும் ஓர் கல்லூரியில் கால் பதித்தேன்.
என் வாழ்வின் தேடலில் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் கோயம்புத்தூரில் நான் கடந்து வந்த நாட்கள். வாழ்க்கையின் சந்தோசங்கள் அதிகமா உலவிய தருணம் அது.
கோயம்பத்தூர் என்றாலே மரியாதை என்ற வார்த்தையை தாண்டி சோகங்கள் , வலிகள் , பயம் , பயணம், ஏமாற்றம் என்ற அனைத்தையும் அந்த ஊர் எனக்கு கற்று தந்தது.
கல்லூரி நண்பர்களோடு நினைத்த நொடி பயணம் , கவலை இல்லா வாழ்க்கை என்று ஒவ்வொரு நாளும் நான் ரசித்து வாழ்ந்த காலம் அது.
அதற்கு மேலும் சுவாரசியமாய் என்னுடைய பகுதி நேர வேலை பல அனுபவங்களை பக்குவமாய் காட்டிக்கொடுத்தது.
அதிகமாக பயணப்பட வேண்டும் என்ற சிந்தனையை எனக்கு அளித்ததும் இதே ஊர் தான். நெரிசல் இல்லா நகரம்.நினைத்ததை முடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்கு கற்றுக்கொடுத்ததும் இதே ஊர்தான்.
மலைகள், மழைத்துளிகள் , ஈரக்காற்று என்று எங்கு சுற்றினாலும் பசுமைக்கு பஞ்சமில்லா மெட்ரோ சிட்டி. இப்போது தொழில் நகரமாக அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்பது வேறு கதை.
தாவணி தாரிகைகள் துவங்கி கேரளத்து சிட்டுகள் வரை அனைவரும் சங்கமிக்கும் ஓர் அழகிய நகரம்.
வர்ணிப்புகள் கடந்து வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ கற்றுக்கொடுக்கும் சிட்டி என்றால் மிகை ஆகாது.
என் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வை, திறமையை வைத்து தீர்மானித்த பேசும் நகரம்.
Comments
Post a Comment