நேரம் சரியாக ஏழு மணி, இருள் சூழா பெளர்ணமி அது , சரி "வா போகலாம்" என்ற தொனியில், என் இருசக்கர வாகனத்திடம் தனியே பேசியபடி என் வீட்டை நோக்கி கிளம்பினேன்.
வாகனங்கள் எல்லாம் வரிசைக்கட்டிய படி நெரிசலில் தவழ்ந்து கொண்டிருந்தது.
"நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற நம் அரசின் கோட்பாடு காலாவதியாகி கால் நூற்றாண்டு ஆன உணர்வு.
வடித்தெடுத்த முட்டாள்கள் ஆங்காங்கே ஹாரன் அடிக்க, பிச்சைக்காரர்கள் "சார்" என்று ஆங்கிலத்தில் பிச்சை கேட்க, தூரத்தில் கரைவேட்டி, கட்சி கூட்டம் நடத்த, நம் நாடு வல்லரசு ஆனது போல் ஓர் நிழல் தோற்றம் என் கண் முன்னே.
நேரம் ஆக ஆக நெரிசல் நீண்டு கொண்டே போனது. என் விழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்த படி , அவளின் முகம் பார்த்த நொடி இமைக்காமல் நின்றது.
மஞ்சள் நிற ஸ்கூட்டி அவளை ஆரத்தழுவி அணைத்து கொண்டிருந்தது. பெளர்ணமி நிலவில் நான் கண்ட அவளின் முகம், தேடினாலும் கிடைக்காத வரம்.
ஐபோனை கையில் எடுத்து எதையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் நெற்றிக்கு நடுவே, அவளை ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் பொட்டு.
கிறுக்காத ஓவியம், கிறங்கடிக்கும் சிற்பமாய் என் அருகே , ஓர் நாள் முழுவதும் நெரிசல் நீளாதா என்ற ஆவலில் மீண்டும் அவளை பார்க்க, ஹாரனை இடைவிடாது அழுத்திக் கொண்டிருந்தாள். அழகிகள் ஹாரன் அடித்தாலோ , நம் மேலே வண்டியில் இடித்தாலோ அமைதி காக்க வேண்டும் என்பது ஆண்கள் டைரியில் எழுத படாத விதி.
நெரிசல் சற்று விலக, கண்ணெதிரே இருந்தவள் கண் சிமிட்டும் நேரத்தில் கால் கிலோ மீட்டர் போய்விட்டாள்.
சரி நாமும் "வா போகலாம்" என்ற தொனியில் என் இருசக்கர வாகனத்தை மெதுவாய் விரட்ட , என் முன்னே முந்தி கொண்டு மற்றுமொரு ஸ்கூட்டி நீல நிறத்தில் பறந்து சென்றது , அதை பின் தொடர்ந்த படி என் வீட்டை நோக்கிய என் நெரிசல் பயணம்.
பி.கு : பெண்களை ரசிக்க பழகுங்கள் இரைச்சல் நிறைந்த நெரிசல் கூட அழகாகும்
Comments
Post a Comment