KFC க்கு அருகே உள்ள அதே பேருந்து நிறுத்தம் தான் எந்த மாற்றமும் இல்லை அவளுக்கான காத்திருப்பில் அயர்ந்தவனாய் உயிரில்லா கைப்பேசியை உயிர் போக தடவிக்கொண்டிருந்தான்.
கார்ப்பரேட் வாசல் இத்தலைமுறை காதலின் முதல் தொடக்கம். அதே போல் தான் அவனும் தன் தொடக்கத்தை எதிர்பார்த்து காத்திருப்பில் ஆழ்ந்திருந்தான்.
நாகரீக காதலர்கள் அதிகம் உறவாடும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான். காலை,மாலை,இரவு என்று நேரங்கள் கடந்த காதல் கதைகள் இங்கு ஏராளம்.
காதல் தாண்டி , காமம் தாண்டி பிரிவை எதிர்நோக்கும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான்.
அவனின் அழகி அவனுக்கு அருகில் அதே பேருந்து நிறுத்தத்தில் தொடக்கத்தை துவங்கி வைக்க வந்துவிட்டாள்.
புருவங்கள் குறைத்து , முக அழகும் சிதைத்து , உதட்டோர சாயத்தில் , இறுக்கிய உடையில் பெண்ணியம் பேசிடும் மிடுக்கான பெண்ணாக அவன் அருகே அவள்.
ஒரு வாரம் முன்பு தான் அவளை முதல் முறை இதே பேருந்து நிறுத்தத்தின் அருகே பார்த்தான்.
இன்று இரண்டாவது முறை காதலிக்க துவங்கிவிட்டான்.அவளிடம் சொல்லியும் விட்டான்.
அவளும் அடுத்த காதலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இவனின் அறிமுகம்.
கார்ப்பரேட் வாசலில் மற்றுமொரு கார்ப்பரேட் காதல். காதல் கடந்து காமத்தை எதிர்நோக்கி.
வெட்கத்தில் முகம் சிவந்து , பேச்சுக்கள் தடுமாறி , நெடுநாள் காத்திருந்து , ஒரு நாள் சந்தித்து , பல கதைகள் பேசி , கடைசியில் கைபிடித்து , இடுகாடு ஏறும் வரை இன்பத்தில் தவழ்ந்த அத்தலைமுறை காதலும் அழிந்தே போய்விட்டது.
ஆறு மாதங்கள் அட்டைப்பூச்சியாய் கார்ப்பரேட் காதலுக்குள் மூழ்கி கிடந்தது அவனின் தேகமும் இவளின் மேனியும்.
பூக்களால் அலங்கரித்த மணமேடைக்கு எதிரே அவன் அமர்ந்திருக்க அவளின் திருமணமும் அழகாய் அரங்கேறியது.
கார்ப்பரேட் காதலின் காட்சிப்பிழைகளை கண்ணெதிரே காண்கிறேன். காமம் கடந்த காதல்கள் இனியாவது மலரட்டும்..
Comments
Post a Comment