முழுதாக ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது.இன்று ஒன்றாம் தேதி புதிதான ஒர் உற்சாகம் என் மனதிற்குள் வயலின் வாசித்து கொண்டிருந்தது.
வேலையெனும் அழுத்தத்தை ஆரவாரமாக அளித்தாலும் தேதி ஒன்றானால் தீர்க்கதரிசியாய் மாறி போகிறது இந்த ஐ.டி காரனின் மனது.என் மனதும் அதுபோல் தான்.
அன்று வெள்ளிக்கிழமை , மாலை நேர சோம்பலிலே மெதுவாக டீ கிளாஸை தேடி என் கால்கள் நகர்ந்தது.
இருபது நாள் வருமானம் எனக்கென ஒதுக்கப்பட்ட வங்கி இருப்பில் காலையிலேயே ஏற்றிவிடப்பட்டது.
சந்தோஷத்தில் என் கால்கள் தரையில் , மிதந்தவனாய் சுற்றி திரிந்தேன்.திரிந்த கால்களோடு டீக்கடை வாயிலில் நானும் , என் நண்பர்களும்.
"அண்ணே , 4 டீண்ணே "
"ஹம்ம் , சரிங்க சார் "
டீக்கான காத்திருப்பில் என் மனதில் ஆயிரம் ஆயிரம் யோசனைகள். முதல் மாத சம்பளம் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் என்ன வாங்குவது என்ற யோசனைதான்.
"மச்சீ , இன்னைக்கு என்னடா படம் ரிலீஸ் ஆகிருக்கு "
"தெரில மச்சி , ஏதோ ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆகிருக்கு டா , செமயா இருக்குன்னு எங்கண்ணண் சொன்னான் "
"நைட் ஷோ போலாமா மச்சி "
"நான் ரெடிப்பா , டேய் கார்த்தி நீ வர்ரியா டா "
அதுவரை யோசனையில் இருந்த என் மூளைக்கு அப்போது தான் என் நண்பனின் குரல் லேசாக எட்டியது.
"இல்ல , தினேஷ் நீங்க போய்ட்டு வாங்க , evening கொஞ்சம் வேலை இருக்கு "
"டேய் , நாளைக்கு லீவ் தான , ஒழுங்கா வாடா , அதுவும் இல்லாம நீ job ல joint பண்ணுணதுக்கு இன்னும் treat கொடுக்கல , so அதையும் அப்படியே கொடுத்திரு"
சார் டீ என்ற குரல் எங்கள் உரையாடலுக்கு கொஞ்சம் ஓய்வளித்தது.
"அது , இல்ல மச்சீ மாமா வீட்டுக்கு வரேன் சொல்லிட்டேன் , அது நால தான் வரல , நீங்க போய்ட்டு வாங்க டா , இன்னொரு டைம் போலாம் "
"சரிப்போ , உன் நஷ்டம் "
சதீஷ் சிரித்தவாரே " டேய் கார்த்தி , இன்னைக்காவது பில்ல நீ கொடுடா "
"மச்சி , இன்னும் salary பணத்த எடுக்கவே இல்ல டா " என்றேன் இஞ்சி தின்ற குரங்கை போல.
"டேய் , அவன் தான் காச வெளிய எடுக்க மாட்டான் ல , தெரிஞ்சும் கேக்குற , எவ்வளவுணே ஆச்சு , என்றபடி பணத்தை பறக்கவிட்டான் தினேஷ்.
எல்லார் நட்பு வட்டத்திலும் என்னை போன்ற ஒருவன் கஞ்சன் என்ற புனைப்பெயர் கொண்டிருப்பான்.அவனுக்கும் ஆசைகள் இருந்திருக்கும் , அதையெல்லாம் அடக்கி கொண்டு தான் கஞ்சன் என்ற கன்றாவி பெயரை பெற்றிருப்பான்.
சரி , அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் என்ன வாங்குவது மனம் முழுதும் அதே சிந்தனை தான்.
சிந்தித்து கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.தீடிரென்று எதிரே ஒரு உருவம்
" என்ன சார் , சம்பளம் வாங்கீட்டீங்க போல , இப்பயாவது ரீசார்ஜ் பண்ணுவீங்களா ? "
ஆம் , என் எதிரே அதே வித்யா , பின்னிய ஜடையில் மல்லிகையை தொங்கவிட்டு , பார்ப்பதற்கே பதுமை போல் காட்சியளித்தார்.
அன்று அவசரமென்று அப்பாவிடம் பேசியதுவிடுத்து மூன்று முறை அவரின் கைபேசியை கடனாக பெற்றுள்ளேன் கால் செய்வதற்கு , அதனால் தான் இவ்வளவு கிண்டலாக கேட்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவரின் மொபைல் எண் இதுவரை எனக்கு தெரியாது.
"அய்யோ , இந்த டைம் கண்டிப்பா ரீசார்ஜ் பண்ணிருவேன் கவலபடாதீங்க" என்றேன் பவ்வியமாக.
"ஓ... சரி சரி , அப்புறம் வேற என்ன ப்ளான் "
"ப்ளானெல்லாம் ஒன்னுமில்லைங்க , பசங்க படத்துக்கு கூப்டாங்க"
" சூப்பர் , என்ன flim ?
" இல்லைங்க நான் போகல "
" ஓ... ஏன் போகல ?"
"முதல் மாச சம்பளம் , அது தான் அம்மா , அப்பா க்கு ஏதாவது வாங்கி கொடுக்கலாம்ன்னு பாக்குறேன்"
"செமங்க , என்ன வாங்கி தரப்போறிங்க ?"
"தெரியலங்க , இனிதான் யோசிக்கனும் "
" சரி , சரி நல்லா யோசீங்க அப்புறம் முடிவு பண்ணுங்க but நான் என் first month salary ல எங்க அப்பா , அம்மாக்கு dress தான் எடுத்து கொடுத்தேன்"
"ஓ , அப்ப dress யே எடுத்து கொடுக்கலாமா ?
" அது எனக்கு தெரியாது நீங்க முடிவு பண்ணிங்கோங்க , நான் கிளம்புறேன் cab வந்திருச்சு " என்று சிரித்து கொண்டே நகர்ந்தார்.
என்னை சுற்றிலும் ஆண் நண்பர்கள் வரிசை கட்டி நின்றாலும் ,ஒரு பெண் தோழியிடம் தான் இவ்வளவு எளிதாக என் மனதால் பேச முடிகிறது.
ஆனாலும் , இன்னும் முடிவெடுக்கவில்லை அதே யோசனையில் தான் நகர்கிறது என் மூளை.
Comments
Post a Comment