Skip to main content

‪மாலை‬ ‪‎நேர‬ ‪டீகிளாஸ்‬ 6.0

நெடுநாள் காத்திருப்பிற்க்கு பிறகு என் சொந்த ஊருக்கு செல்கிறேன்.
இன்னும் சிறிது நேரத்தில் எனக்கென தேடி பிடிக்கப்பட்ட
unreserved இருக்கையில் ஒரு ரம்மிய பயணம்.
இரயில் புறப்பட தயாராகி மெதுவாக நகர்ந்தது.எதிரே முகமறியா வாலிபரும் , வெத்தலை வாயுடன் வயதான இரண்டு பெரியவர்களும் அவர்களுக்குள்ளாகவே எதையோ பேசிக்கொண்டு சிரிப்பை சில்லரையாய் உதிர்த்து கொண்டிருந்தனர்.
நான் பொதுவாக இரயிலில் ஏறியவுடன் மேல்இருக்கையில் என் உடலை சாய்ப்பது வழக்கம்.இதுவும் என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது தான்.
சிறு வயதில் எங்கேயாவது இரயில் பயணம் சென்றால் இரயில் நிற்பதுக்கு முன்பாகவே உள்ளே ஏறி , மேல் இருக்கையை பிடித்து "நீ படுத்துக்க தம்பி" என்பார்.
அப்போதெல்லாம் தெரியாது இருக்கைகுள் அடைந்தமரும் இராவிழி வேதனையை. பின்பு நாட்கள் நகர அந்த வேதனையை தனிமையில் உணர்ந்து , அது பழகியும் போய்விட்டது.
எதிரே அமர்ந்திருந்த பெரியவர்கள் இருவரும் மெல்ல பேச துவங்கினர்.அதைக்கூட அறியாமல் கைபேசியை தடவிக்கொண்டிருந்தான் என் அருகில் இருந்த வாலிபன்.
எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை , கிடைத்திருந்தால் நானும் அது போல் தான் தடவிக்கொண்டிருந்திருப்பேன்.
நான் என் ரப்பர்பேன்ட் சுற்றிய நோக்கியாவை வெளியில் எடுத்தாலே , பல உருவங்கள் உள்ளுக்குள் ஏளனத்தில் எள்ளி நகையாடும்.
இதையெல்லாம் , யோசனையில் போட்ட படி எதிர் அமர்ந்த பெரியவரை பார்த்தேன்.
"இந்த காலத்துல , மனுஷங்கள்ட்ட யாருய்யா பேசுறாங்க , போன் பேசுறபெட்டிக்குள்ள அடைஞ்சு கிடக்குறாங்க , கேட்டா உலகமே அதுக்குள்ள இருக்குதுன்னு அவங்கள அவங்களே ஏமாத்திகிறாங்க "
"என்னத்த சொல்ல , நம்ம காலத்துல மனுஷங்கள சாம்பாதிச்சோம் , இப்ப அப்படியா ஊரே பணம் பணம் ஓடுறாங்கய்யா " என்றார் அவர் அருகில் இருந்த மற்றொரு பெரியவர்.
"இப்ப கூட பாரு , காடு கரையெல்லாம் வித்து என் புள்ளைய படிக்க வச்சேன் , கை நிறைய சம்பாதிக்கிறான் , கேட்டதெல்லாம் வாங்கி தர்றான் , ஆனா அவன் ஒரு ஊர்லையும் , நான் என் சொந்த ஊர்லையும் அல்லாடிட்டு கிடக்குறோம் "
"ஏம்யா , போய் உம்முட்டு புள்ள கூடவே இருக்க வேண்டியது தான ?
" எங்க , புறந்த ஊர விட்டு போக என் மனசு கேக்கல , அது தான் தோன்றப்ப வந்து பேரப்புள்ளைகள பாத்துட்டு போயிக்கிறேன் , உங்க புள்ள என்ன பண்ணுது ? "
" அத ஏன் கேங்குறீங்க , இரண்டு ஆம்பிள புள்ளைய பெத்து ஏதோ முடிஞ்ச அளவுக்கு படிக்க வச்சேன் , ஒருத்தரு பொள்ளாச்சி பக்கம் மளிகை கடை வச்சிருக்காரு , இன்னொருத்தரு இங்க சென்னையில ஏதோ பெரிய கம்பெனில வேலை செய்றாப்டி , மாசம் ஒரு ஊருக்கு போய் வயித்த கழுவிட்டு இருக்கேன்"
எதிரே அமர்ந்திருந்து இவற்றை கேட்டு கொண்டிருந்த எனக்கு மனம் ரணமாய் மாறிவிட்டது.
பணம் தேவையென்ற அளவிற்க்கு கொடுத்தும் அநாதையாய் வாழும் ஒரு பெரியவர் , உயிர் வாழும் உணவை தேடி மாதாமாதம் அகதியிருப்பை மாற்றும் மற்றொரு பெரியவர்.
என் அப்பாவோ , அம்மாவோ இது மாதிரியான நிலைமையை எள்ளலவும் எண்ணகூடாது என்பது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
தற்பெருமைக்கென தம்மை எழுதிக்கொடுக்கும் இக்காலத்தை ஒப்பிடும் போது , வெளிப்படையாக குழந்தைபோல் குதப்பிகொண்டு பேசும் அப்பெரியவர்கள் வாழும் தெய்வங்கள் தான்.
நேரம் 11 மணியை நெருங்கி கொண்டிருக்கையில் தீடிரென ஒரு அழைப்பு , ஆம் வித்யாவிடமிருந்து தான்.
"ஹாலோ "
" என்ன கார்த்திக் சார் , Train ஏறுனதும் கால் பண்றேன்னு சொன்னிங்க "
"bal இல்லைங்க , அது தான் கூப்புடுல "
" மறுபடியும் அதே கதையா , சரி பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க "
" சரிங்க , ரொம்ப Thanks "
"எதுக்கு ? "
" இல்ல , நேத்து அம்மாக்கு saree select பண்ணி கொடுத்ததுக்கு "
" ஓ , அதுக்கா , சரி சரி "
" சரிங்க , விட்டு விட்டு கேக்குது , நான் காலைல கூப்புடுறேன் "
" நீங்க , காலைல , அப்படியே கூப்டுட்டாலும் , சரி பத்திரமா போய்ட்டு வாங்க கார்த்திக் " என்றார் சிரித்தபடி
"சரிங்க , good night " என்று சொல்லி கைபேசியை அமர்த்தினேன்.
ஐந்து நிமிட அலைபேசி பேச்சுக்குள் , அப்பெரியவர்கள் குடும்பம் கடந்து அரசியல் பார்வைக்குள் அடியெடித்து வைத்தனர்.
அவர்களின் பேச்சுக்கு அடிமையாகி போன என் மனது காட்பாடி இரயில் நிறுத்தத்தில் விழித்தது.என் அருகே அமர்ந்திருந்தவரும் அந்நிறுத்தத்தில் இறங்கவே , ஜன்னலோர இருக்கை என் வசமானது.
"சார் , டீ காபி , டீ காபி என்று கூவிக்கொண்டே அங்குமிங்கும் ஒரு சிறுவன் நடந்து கொண்டிருந்தான்.
" தம்பீ , இங்க ஒரு டீ ப்பா " என்று வாங்கி கொண்டு அந்த பெரியவர்கள் சொன்னதையே நினைத்து கொண்டிருந்தேன்.
இந்த இரயில் ஏறும் வரை , ஏன் அந்த பெரியவரின் பேச்சை கேட்கும் வரை , பணம் தான் உலகமென்று என் மனம் உளறிக்கொண்டிருந்தது.
அதன் வெளிப்பாடு தான் என் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் நான் வாங்கிய ஆடை.
நானும் பாசத்தை பணம் என்ற பொருளுக்குள் தான் அடைத்து வைத்து கொண்டிருக்கிறேனோ என்றும் கூட எண்ணிக்கொண்டிருந்தேன்.
எது எப்படியோ , மூன்று மாத இடைவெளிக்கு பிறகு என் அம்மா , அப்பா வை காண போகிறேன் என்ற சந்தோஷத்தில் சிலாகித்தவனாய் , ஜன்னல் கம்பிகளை பற்றிக்கொண்டு , அப்பெரியவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இரயிலோடு நகர்கிறேன்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...