Skip to main content

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0



விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது.
ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன்.
என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது.
இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன்.
அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி.
மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர்.
பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது.
இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன்.
முன்னால் என் எதிரி முருங்கை மரம் பின்னால் கொஞ்சம் காலி இடம் நடுவே கருஓலை குடிசையில் தான் என் வீடு.என் அப்பா உழைத்த உழைப்பிற்கு சேமித்த மிச்சம் இந்த இடம் மட்டும் தான்.
ஏதோ ஒன்று வீட்டின் வாயிலில் மறைந்திருந்தது. ஆம் என் அப்பாவின் மிதிவண்டி தான் , இருபது ஆண்டுகள் அவருடனே பயணம் செய்த மிதிவண்டி அது , ஆங்காங்கே சில ஒடுக்கங்களுடன் இன்றும் என் அப்பாவின் ஆஸ்தான வாகனமது.
சரி , இந்த காலை பொழுதிலே இவர் எங்கு சென்றிருப்பார் என்ற சிந்தனையிலேயே முன் நகர்ந்தேன்.
"சாமி " என்றொரு குரல் அம்மா தான்.
"அம்மா.... , எப்படி இருக்க அம்மா ? "
"நான் நல்லா இருக்கேன் சாமி , இப்ப தான் நினச்சேன் , எங்க புள்ளைய இன்னும் காணோம்ன்னு "
"இப்ப தாம்மா வந்தேன் "
" ஏன் , சாமி இப்படி இளச்சு கிடக்குற , நேரா நேரம் சாப்டுயா " என்றார் கண்கலங்க
"அம்மா , இப்ப ஏன்மா அழுகுற , அதெல்லாம் ஒன்னுமில்ல மா , நான் நல்லா தான் சாப்டுறேன் "
"அய்யோ , நான் ஒரு கிறுக்கச்சி ஊர்ல இருந்து வந்த புள்ளைய வாசல் லையே நிப்பாட்டி பேசிட்டு இருக்கேன் பாரு , உள்ள வா சாமி "
"ஹம்... சரிம்மா "
அதே குழந்தை பேச்சுடன் , அழுக்குபடிந்த சேலையில் அவளின் உலகறியா அன்பிற்கு இன்னொரு ஜென்மமேனும் இதே ஓலை குடிசையில் அவள் வயிற்றில் பிறக்க வேண்டும்.
"சாமி , கை கால் கழுவீட்டு வாய்யா , காபி வைக்குறேன்"
"சரிம்மா " என்றேன் சிரித்தபடி
பட்டிணத்தில் கடந்த இந்த மூன்று மாதத்தில் மறந்து போன என் கிராமத்து சுவடுகளில் இந்த கை , கால் கழுவும் பழக்கமும் ஒன்று.
முன்பெல்லாம் வெளியில் சென்று வந்தாலே கை , கால்களை சுத்தமாக கழுவிவிட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும். அப்படி கழுவாமல் உள்ளே வந்தால் முருங்கை மரத்தின் குச்சிகளில் சரமாரியாக அடிவிழும்.
அப்போதும் அழுதுகொண்டே அந்த முருங்கை மரத்தை திட்டுவேனே தவிர என் அம்மாவை திட்டியது இல்லை. இப்படி பலமுறை அடிவாங்கி அடிவாங்கி அந்த முருங்கை மரம் என் எதிரியானது தான் மிச்சம்.
கழுவிய கை , கால்களோடு உள்ளே சென்று அப்பாவின் கயிற்று கட்டிலில் அமர்ந்தேன்.
" இந்தா சாமி , சூடா இருந்தா கொடுய்யா , ஆத்தி தாரேன் "
" இல்ல மா , அளவு சூடு தான் , என்னம்மா பால் காபி போட்டுருக்க ? "
எங்கள் வீட்டில் வரக்காபி தான் அன்றாட வழக்கம் , யாராவது விருந்தினர் வந்தால் தான் பால் காபி , பட்டிணத்து சென்று கிடைக்க மறுத்த கிராமத்து சுவடுகளுள் இதுவும் ஒன்று.
" இல்ல சாமி , நீ வரேன்னு சொன்னியா , அது தான் நம்ம பால்கார கனகராஜ்ட்ட கால் லிட்டர் வாங்குனேன் "
"எதுக்கு மா , இதெல்லாம் , சரி அப்பா எங்க , சைக்கிளையும் காணோம் "
" நீ , வரேன்னு சொன்னதுல இருந்து மனுஷன் தலகால் புரியாம அங்கிட்டும் இங்கிட்டும் ஒடிட்டு கிடந்துச்சு , காலை லையே போன தான் நல்ல கறியா கிடைக்கும்ன்னு பாய்க்கடை க்கு போயிருக்கு "
"ஏன்மா , அவர அலைய வைக்குற "
"அதெல்லாம் , ஒன்னுமில்ல சாமி , செத்தநேரம் படு , நான் போய் நல்லெண்ண வாங்கிட்டு வாரேன் "
"அதெல்லாம் எதுக்குமா ? "
" சும்மா இரு சாமி , உடம்பு உருக்குழைஞ்சு கிடக்கு , கண்டவன் கண்ணெல்லாம் வேற பட்டிருக்கும் , நல்லா எண்ணெய் தேச்சு குளிச்சைன்னா எல்லா கிரகமும் ஓடிப் போய்டும்"
"ஹம்ம்....சரிம்மா" என்றபடி கட்டிலில் தலையசைத்தேன்.
பட்டம் முடித்து பட்டினம் சென்று பணம் என்னும் காகிதம் பெற பாசத்தையள்ளவா அடமானம் வைத்திருக்கிறேன்.
கடந்து போன மூன்று மாதங்களில் என் அம்மாவின் அன்பெனும் பாசத்தை எவ்வளவு தவறவிட்டிருப்பேன்.
அதையெல்லாம் நான் சம்பாரிக்கும் இந்த பணத்தால் விலைக்கு வாங்கி விட முடியுமா ? ஆழ்ந்த யோசனையில் டீ கிளாஸை அருகில் வைத்துவிட்டு , அழுப்பான என் கண்களும் அப்படியே அயர்ந்தது.

#தொடரும் 

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...