மயான அமைதியில் அவன் கால்கள் எதையோ தேடி , நடந்து கொண்டிருந்தது.வாழ்க்கையில் முழுதும் தோற்கடிக்கப்பட்டவன் தான் .கையில் எதையோ தூக்கி கொண்டு வானுயர்ந்த கட்டிடங்களை அயர்ந்து பார்த்த படி நகர்ந்து கொண்டிருந்தான்.
நிழலான வாழக்கைக்கு இவன் ஒரு எடுத்துக்காட்டு. நிஜத்தை தொலைத்தவனை நிழல் என்று கூறுவது தான் உரித்தாக இருக்கும். தொலைத்தவன் என்ற சொல்லை கூட தொலைக்கடிக்கப்பட்டவன் என்று திருத்தி கொள்ளலாம்.
ஆம் , அவன் பெயர் வெற்றி , தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள விவசாய கிராமத்தின் முதல் நிலை வாரிசு. அவன் அப்பா படித்தவர் தான் ஆனால் பாவம் இந்நாட்டின் கல்வி முறையில் படித்தவர். அதனால் தான் என்னவோ விவசாய நிலத்தை விற்று அவர் ஆசையை அவன் மீது திணித்தவர்.
அவன் அம்மாவோ தமிழ் பண்பாட்டை கெடுக்காத ஆன்மீக அறிவு கொண்ட அடுப்பூதும் பெண்.
வெற்றியை பற்றி ஒரு வரியில் சொல்லப்போனால் தனியார் மயமாக்கப்பட்ட உலகில் தனக்கென்ற தனிமையில் கனவுகளை துழைத்து நிஜத்தை தேடும் நிழல்.
சிறு வயது முதலே அவன் வாழ்க்கையை பற்றி நினைத்து நினைத்து தினம் தினம் ஓடி கொண்டிருப்பவர் , அவன் அப்பா. நல்லவர் தான் அவர் மனதிற்கு பூட்டிட்டு மூளையின் பேச்சை கேட்க்கும் நல்லவர்.
தமிழில்லா தனியார் பள்ளியில் தன் மகன் படிப்பதை உற்றார் உறவினரிடம் சொல்லி பெருமை படும் அளவிற்கு நல்லவர். மகனுக்கு என்ன விருப்பம் என்பதை கேட்க நேரமில்லாத அளவிற்கு நல்லவர்.
வெற்றியோ கனவுகளை துழைத்து, அப்பா , அம்மா வின் ஆசைக்காக இன்ஜினீரிங் எடுத்து இப்போது வேலைக்காக சென்னையில் அலைந்து கொண்டிருக்கும் சராசரி மனிதன்.
வேலை கிடைக்கவில்லை என்பதற்காக இன்ஜினீரிங் ஒன்றும் தகுதி குறைந்த படிப்பு இல்லை. அறிவை அலசி பார்க்கும் படிப்பு. சிலருக்கு அது பிடிக்கும் , ஆனால் பலருக்கு பிடிக்காது.
இதற்கு காரணங்கள் தேவை இல்லை , காரணமே ஆசை தான். அரை ஆயுள் முழுதும் பிடிக்காத ஒரு படிப்பை பிடித்தவாறு அனைவரையும் நம்ப வைத்து நாமும் மனதால் வெந்து கொண்டு , முடிவில் வெந்தும் போய் விடுவோம்.
பொதுவான ஒரு அறிவை விதைக்காத கல்வி முறையில் இத்தலைமுறையினர் உயிரோடு நடமாடுவதே அரிதான விஷயம் தான்.
கல்வியை வைத்து காசாக்கும் வித்தையை கல்வி நிறுவனங்களும் , அங்கு வாங்கும் கல்வி சான்றிதழை வைத்து காசாக்கும் வித்தையை சராசரி மனிதனும் நன்கு புரிந்து வைத்துள்ளான்.
ஒருவனுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமா இருந்தால் தியாகம் செய்வதாய் நினைத்து விடுதியில் விற்றிடும் பெற்றோர் தான் இங்கு எத்தனை பேர். எண்ண முடியாது எண்ணிலும் அடங்காது.
அதே போல் தந்தையின் ஆசைக்காக தன் கனவை அடக்கி கொண்டு விடுதியில் விலைக்கு போன வெற்றுடல் உயிர் தான் வெற்றி.
வாக்குவாதமின்றி ஒரு கனவை கலைப்பது எவ்வளவு கொடுமையான செயல்.அதே போல் தான் இங்கு பலரும் நிழலாய் வாழும் நிஜங்களாய் தங்களை தாங்களே மாற்றி கொள்கின்றனர் , பெற்றோரின் ஆசைக்காக.
வெறும் காகிதங்களை வைத்து கொண்டு தன் மகனுக்கு அனைத்தும் கொடுத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டே அழிகிறது பெற்றோரின் வாழ்க்கை.
இத்தலைமுறையின் யதார்த்த பிரதிபலிப்பு தான் வெற்றி , அவனை தவிர்த்து இதை இப்போது படித்து கொண்டிருக்கும் பல நிழல்களுக்கும் இது பொருந்தும் அவர்களுக்கும் கனவுகள் தகர்ப்பட்டிருக்கலாம் , ஏன் பலராலும் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். நீங்களும் இத்தலைமுறையில் படித்தவர்கள் தான் அதனால் உங்களை குறை கூறி எவ்வித பலனும் இல்லை.
உங்களின் அடுத்த தலைமுறையை அவர்கள் விருப்ப படி வளர விடுங்கள் , முக்கியமாக உங்களின் ஆசைக்காக உங்கள் குழந்தைகளை விடுதியில் விற்காதீர்கள்.
மதிப்பெண் வாழ்க்கையை மறந்தொழித்து மகனின் ஆசையை ஆராயுங்கள்.
மாற்ற முடியாத கல்வி முறையில் நம்மை நாமே மாற்றி கொள்வது சாலச்சிறந்தது .
அடுத்த தலைமுறையாவது கனவுகளை நிஜமாக்கி அதில் வாழட்டும்.
Comments
Post a Comment