கேப்டன் என்ற இந்த பெயரில் தான் விழுந்தது என் சமகால இளைஞர் தலைமுறை. இன்றுவரை உங்கள் படங்களினால் ஈர்க்கப்பட்ட பலகோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.
2005 இல் நீங்கள் முழுநேர அரசியலில் முழுமையாய் இறங்கிய போது தமிழ்நாடு மாறிவிடும் என்ற மகிழ்ச்சியில் திளைத்துப்போனேன்.
அந்நாளில் தமிழக மக்களின் பெருவாரியான எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது.
2006இல் நடந்த தேர்தல் தான் உங்கள் கட்சிக்கான முதல் அங்கீகாரம். அடையாளம் என்றும் கூட சொல்லலாம்.
ஆளுமையில் உள்ள கட்சிகளே கூட்டணியை தேடி அழைந்த போது ,234 தொகுதியிலும் தனித்து நிற்பதாய் மக்கள் அனைவரையும் திகைக்க வைத்தீர்கள்.
உங்களின் துணிச்சலான அந்த முடிவிற்க்கு பலனும் கிடைத்தது. கட்சி தொடங்கிய எட்டே மாதங்களில் பொது தேர்தலை தனித்து சந்தித்து 30 இலட்சம் வாக்காளர்களை கொத்தாக அள்ளினீர்கள்.
அந்த 30 இலட்சத்தில் இளைஞர் கூட்டம் மிக அதிகம்.
அரசாண்ட கட்சிகள் அனைத்தும் வாயடைத்து போனது. அரசியல் விமர்சகர்களையே அதிர வைத்த தேர்தலாக அது அமைந்தது.
இடைப்பட்ட காலங்களில் (2006-2009) உங்களின் செய்கை சரியான பாதையில் கச்சிதமாய் சென்று கொண்டிருந்தது. அதுவரை இணைய உலகில் உங்களை போற்றி புகழ்ந்த புகைப்படங்களை மட்டுமே பார்த்தவன் நான்.
மற்ற கட்சிகளை போல நீங்களும் செயல்பட ஆரம்பித்தது கேப்டன் எனப்படும் உங்கள் தொலைக்காட்சி சேனலை நிறுவிய போது தான்.
அதில் உங்களை நீங்களே தற்பெருமை செய்து கொண்டீர்கள். மற்ற கட்சி சேனல்களை பார்த்து பழக்கப்பட்ட என் மக்களுக்கு உங்கள் சேனலும் தொடர்கதை ஆனது.
இருந்தும் மக்கள் உங்கள் மேல் அளவிற்கதிகமான நம்பிக்கை வைத்திருந்தனர் அதன் வெளிப்பாடாய் 2009இல் நடந்த லோக் சபா தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.
இலையையும் , சூரியனையும் மட்டுமே சின்னங்களாய் நினைந்திருந்த பல மக்களுக்கு உங்களின் முரசும் ஒலிக்க துவங்கியது.
MLA என்ற பொருப்பில் முதல் முறை நீங்கள் ஜெயித்த , உங்கள் கட்சி ஜெயித்த விருதாச்சலம் தொகுதிக்கு நிறையவே செய்துள்ளீர்கள்.அதை விகடன் வெளியிட்ட ஓர் கட்டுரையில் பார்த்து பூரித்தவன் நான்.
2011இல் அதிமுக வோடு கூட்டணி அமைத்து எதிர்கட்சி எனும் அந்தஸ்தை ஆரவாரமாய் பெற்றீர்கள்.
அதிலிருந்து ஆரம்பம் ஆனது உங்களின் தொடர் சறுக்கல்கள்.
நிறைய இடங்களில் உங்களின் ஆதிக்கம் குறைய துவங்கியது.
நிறைய இடங்களில் உங்களின் ஆதிக்கம் குறைய துவங்கியது.
எனக்கு தெரிந்த வரை எதிர்கட்சியாய் நீங்கள் கேட்ட ஒரே கேள்வி பால் விலை , பஸ் கட்டணத்தை ஏன் உயர்த்துனீர்கள் என்று தான் அத்தோடு அறுந்தது உங்கள் கூட்டணி எனும் பிம்பமும்.
அது மட்டுமா , கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கட்சியாய் நீங்கள் நிலைத்து நின்றது மீம் உலகில் மட்டும் தான்.
தெளிவில்லா உங்கள் பேச்சுக்களில் இளைஞர்களின் விகிதம் பாதியாக குறைந்தது.
குடும்ப அரசியலை குறை சொல்லும் தாங்களே மனைவி , மைத்துனன் என்று குடும்ப அரசியல் நடத்துவது நியாயமா?
இதையெல்லாம் கடந்து , அப்துல்கலாம் அவர்களின் இறுதிசடங்கில் நீங்கள் அழுத போது தான் மீம் உலகமும் , நடுநிலை வர்க்கமும் உங்களை யதார்த்தவாதியாய் சித்தரித்தது.
எல்லா இடங்களிலும் யதார்த்த குணம் பயணளிக்காது என்பதை ஊடகம் வாயிலாய் மக்கள் நிறையவே அறிந்திருப்பார்கள்.
இம்முறை தேர்தலில் உங்களின் பதிலுக்காக காத்திருந்த கட்சிகள் ஏராளம். நீங்களோ உங்கள் துணைவியின் முடிவிற்க்கு காத்திருந்தீர்கள்.
அதிமுக தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் உங்களை key player ஆகத்தான் பார்த்தது.
தனியே நிற்பதாய் தாங்கள் சொன்ன போது திகைத்துப்போனேன்.உண்மையில் பெருவாரியான மக்களின் தனிப்பட்ட எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருந்தது.
எதிர்ப்பார்க்காத கூட்டணியை உங்களுடன் இணைத்துக்கொண்டீர்கள். அப்போதே தெரிந்துவிட்டது நீங்கள் மேடேற மாட்டீர்கள் என்று.
கோட்டையை பிடிப்பதாய் நினைத்து மேடை பேச்சில் கவிழ்ந்து போனீர்கள். அதையும் உங்களின் இயல்பான வெகுளித்தனம் என்றல்லவா மக்கள் பேசி வந்தனர்.
தீர்க்கமான முடிவை தான் அவர் எடுப்பார் என்ற நிலைமை மாறி , நிலையில்லா முடிவின் சொந்தகாரராய் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதன் ஒருமித்த வெளிப்பாடு தான் இன்று சரிந்த கிடக்கும் உங்கள் வாக்குவங்கி.
மக்கள் வாய்ப்பளித்தும் எதிர்கட்சியாய் தாங்கள் செய்த பணி தான் என்ன?
இம்முறை உங்கள் கட்சி ஏற்கமுடியா பின்னடைவை சந்தித்திருந்தாலும் , இளைஞர்களின் மனதில் உங்கள் மேல் ஓர் பரிதாபம் பற்றிக்கொண்டுள்ளது.அதை நிலையான முடிவாலும் , தீர்க்கமான பேச்சாலும் கெட்டியாக பிடித்துகொள்ளுங்கள்...
Comments
Post a Comment