நன்றாக நினைவிருக்கிறது , அவன் பெயர் சபீர் என்னுடைய அரைட்ரவுசர் தோழன். ஓரே பள்ளியில் தான் ஒன்றாக படித்தோம். சாதியும் , மதமும் அறியாத பருவமது. விடுமுறை நாட்களில் நிற்காமல் கிளம்பிவிடும் எங்களின் மிதிவண்டி சக்கரம். ஊர்காவல் அய்யனார் தொடங்கி , மாதா கோவில் , மதுரைவீரன் சிலை , மரிகொழுந்து சோடா , மசூதி தொழுகை , பால் போன்ற ஐஸ்கீரிம் , பண்ருட்டி முருக்கு , பட்டாம்பூச்சி இறக்கை , பொக்கவாய் கிழவி என்று சூரியன் எங்களை இருளில் மூழ்கும் வரை நிற்காமல் சுற்றும் எங்கள் மிதிவண்டி வீல்கள். அப்போது நிச்சயம் நாங்கள் அறிந்திருக்கவில்லை சாதியை பற்றியும் , மதத்தை பற்றியும். அந்த வயதில் நாங்கள் சொல்லும் "சாமி சத்தியமா டா" என்ற ஒற்றை வார்த்தையே அதற்கு சாட்சி. நான் "அம்மன் சத்தியம் என்றோ , முருகன் சத்தியம் என்றோ " கூறியது கிடையாது. சபீரும் " அல்லா சத்தியம் " என்று சொன்னது கிடையாது. உடனிருந்த இன்னொரு நண்பன் ஆல்பட்டும் " இயேசு சத்தியம் " என்று கூறிய நியாபகம் இல்லை. அந்த வயதில் "சாமி" என்ற ஒற்றை வார்த்தையில் முற்று பெருகிறது எங்களி...