நன்றாக நினைவிருக்கிறது , அவன் பெயர் சபீர் என்னுடைய அரைட்ரவுசர் தோழன். ஓரே பள்ளியில் தான் ஒன்றாக படித்தோம். சாதியும் , மதமும் அறியாத பருவமது.
விடுமுறை நாட்களில் நிற்காமல் கிளம்பிவிடும் எங்களின் மிதிவண்டி சக்கரம்.
ஊர்காவல் அய்யனார் தொடங்கி , மாதா கோவில் , மதுரைவீரன் சிலை , மரிகொழுந்து சோடா , மசூதி தொழுகை , பால் போன்ற ஐஸ்கீரிம் , பண்ருட்டி முருக்கு , பட்டாம்பூச்சி இறக்கை , பொக்கவாய் கிழவி என்று சூரியன் எங்களை இருளில் மூழ்கும் வரை நிற்காமல் சுற்றும் எங்கள் மிதிவண்டி வீல்கள்.
அப்போது நிச்சயம் நாங்கள் அறிந்திருக்கவில்லை சாதியை பற்றியும் , மதத்தை பற்றியும்.
அந்த வயதில் நாங்கள் சொல்லும்
"சாமி சத்தியமா டா" என்ற ஒற்றை வார்த்தையே அதற்கு சாட்சி.
"சாமி சத்தியமா டா" என்ற ஒற்றை வார்த்தையே அதற்கு சாட்சி.
நான் "அம்மன் சத்தியம் என்றோ , முருகன் சத்தியம் என்றோ " கூறியது கிடையாது.
சபீரும் " அல்லா சத்தியம் " என்று சொன்னது கிடையாது.
உடனிருந்த இன்னொரு நண்பன் ஆல்பட்டும் " இயேசு சத்தியம் " என்று கூறிய நியாபகம் இல்லை.
அந்த வயதில் "சாமி" என்ற ஒற்றை வார்த்தையில் முற்று பெருகிறது எங்களின் சாதியும் , மதமும்.
பிறகு எந்த வயதில் நம் மனதுக்குள் நுழைகிறது இந்த சாதியும் , மதமும் என்ற கேள்விக்கு
இளமை காலங்களை கொஞ்சம் கிளரினாலே அதற்கான உண்மை வெளிப்படும்.
சபீருடன் நான் சுற்றிய போது "துலுக்க பையலோட என்னடா சகவாசம்" என்று அடிக்கடி ஓயாது ஒலித்து கொண்டிருந்த பாட்டியின் குரல்தான் ஒருவேளை நம் மனதை மாற்றியிருக்குமோ ...
இல்லை , "எட்டாவது வார்டு பையன்கூட என்னடா பேச்சு" என்று தினம் தினம் கழுவி ஊற்றும் அன்னையின் அதட்டலால் வந்திருக்குமோ ..
ஒருவேளை , சாதிய மநாட்டிற்கு இழுத்து சென்ற தந்தையின் அக்கரையால் வந்திருக்குமோ..
விடையில்லா கேள்விகள் தான் அவை.
நிச்சயம் , சபீர் வீட்டிலும் இதே மாதிரி விடையில்லா கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
என் பாட்டியோ , அம்மாவோ , தந்தையோ இல்லை சாதி,மதம் என்று வீணாக பிதற்றி கொண்டிருக்கும் வேலையில்லா மூடர்களோ அனைவரின் பேச்சும் அன்று என் பிஞ்சு மனதிற்கு நஞ்சாகதான் இறங்கியது.
நாட்கள் நகர பெரியார் மற்றும் அம்பேத்கர் புத்தகங்கள் தான் மருந்தாக என்னுள் இருந்த நஞ்சை முறித்தது.
அந்த மருந்து கிடைக்க பெறாத பல உயிர்கள் விஷம் தலைக்கேறி இன்றும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே நகர்ந்து போகின்றனர்.
அது ஒருபுறம் இருக்கட்டும் , இப்போது நான் ஏன் இவ்வாறு பிதற்றி கொண்டிருக்கிறேன்.
ஆமிர்கான் என்பவர் எந்த மதமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் , அவர் கூறிய கருத்தில் உடன்பட்டு போவதும் , உடன்படாமல் ஒதுங்கி நிற்பதும் தனிக்கதை.
அந்த கருத்திற்க்கு தேவையின்றி உயிர் கொடுத்து , அதற்கு மேலும் மேலும் உணவளித்து வரும் சமூக ஊடகங்களுக்கும் , சார்பற்ற அரசியல்வாதிகளுக்கும் ஒன்றை மட்டும் தான் நினைவு படுத்த விழைகிறேன்.
என் நாடு மதசார்பற்ற நாடு , கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்று பாடப்புத்தகத்திலேயே படித்து வளர்ந்தது என் தலைமுறை.
அதை என் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியுமா ? என்றால் பதில் இல்லா வினாவாக தான் இன்றளவில் தொடர்கிறது.
Comments
Post a Comment