அறிமுகம் இல்லா முகம் தான் , சொல்லப்போனால் அன்று தான் முதல் அறிமுகம்.கற்றலைவரிசையில் காதல் செய்த எனக்கு அன்று தான் அவள் முகம் முதல் அறிமுகம்.
அவளுக்கான காத்திருப்பில் அயர்ந்தவனாய் அமர்ந்திருந்தேன்.ஏனோ வியர்வை இடைவிடாமல் ஊறியது.தொண்டைக்குள் ஏதோ தடுமாற்றம். ஆனால்
இன்னும் அவளை பார்க்கவில்லை.
இன்னும் அவளை பார்க்கவில்லை.
சரியாக சொன்னால் அவளை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் ரெண்டுமணி நேரம் முன்பே வந்துவிட்டேன்.ஆனால் இந்த ரெண்டுமணி நேரமும் யாரோ யானையை வைத்து முள் தள்ளுவது போலவே என் கடிகாரம் மெதுவாக சுழன்றது.
நேரம் நெருங்கிவிட்டது , அவள் நிச்சயம் வருவாள் , நான் சொன்ன சிவப்பு நிற சுடிதாரில் , எனக்கு பிடித்த மல்லிகை பூ கூந்தலோடு ,
ஐயோ அவள் எப்படி இருப்பாள் , வெள்ளை நிறமா , கருப்பு நிறமா , ஒல்லியா , குண்டா எதுவும் தெரியாது எனக்கு , கிராதகி போட்டோவை கூட இதுவரை காட்டவில்லை.
யாருக்காகவும் இதுவரை நான் காத்திருந்தது இல்லை , அவளுக்காக முதல் முறை நெடுநேரம் வியர்வை வழிந்த முகத்தோடு காத்து கொண்டிருக்கிறேன்.
நான் காத்துகிடந்த இடமோ ஒரு coffee shop கிட்டத்தட்ட காதலர்கள் கூடும் கலையரங்கம்.சுற்றிலும் காதலர்கள் ஆனால் நான் மட்டும் தனியே , எனக்கானவளும் வந்துவிடுவாள் அவளுக்கான காத்திருப்பு உண்மையில் சுகம் நிறைந்தது தான்.
அந்த தனிமையில் தான் வைரமுத்துவின் வரிகள் உண்மை என்று தோன்றியது.இன்னும் ஓரிரு நிமிடங்கள் தான் அவள் வருகையை எதிர்பார்த்து என் கண்கள் அந்த coffeeshop இன் வாயிலையே பார்த்துகொண்டிருந்தது.
என் கண்கள் வாயிலை பார்க்க , அதன் அருகே இருந்தே முதலாளியின் கண்கள் என்னையே பார்த்து கொண்டிருந்தது.எங்கே காசு கொடுக்காமல் ஓடிவிடுவேனோ என்று.
அவள் சொன்ன நேரம் ஆயிற்று , ஆனால் அவள் இன்னும் வரவில்லை.
இனி எத்தனை முறை அவள் முகத்தை பார்த்தாலும் இவ்வளவு நேரம் காத்திருந்து பார்ப்பேனா என்று சத்தியமாக தெரியவில்லை...
யாரோ ஒரு பெண் தனியாக வருகிறாள்.தூரத்தில் வருகிறாள் முகம் என் கண்களுக்கு சரியாக தென்படவில்லை. ஆனால் பெண் தான் , ஒரு வேலை என்னவள் தான் இவளோ ..
ஆம் , அதே சிவப்பு நிற சுடிதார் தான் , அவள் மெல்ல மெல்ல ஊர்ந்து வருகிறாள் .திருவிழா காலங்களில் தேரில் பவனி வரும் அம்மன் போல..
என் விழிகளின் எதிர்பார்ப்பு விண்ணைதொட்டது , வியர்வை சுரப்பி அனைத்தும் அடைமழையாய் கொட்டியது.கை , கால்களில் கூட ஏதோ ஒரு நடுக்கம்.முகத்தில் ஒரு வித வெட்கம்.
அதை கலைக்கவே அடித்தது அலைபேசி மணி , கனவு கலைந்தவனாய் அலைபேசியை எடுத்தால் அதில் என்னவளின் நம்பர். சற்று அதிர்ந்தே போனேன்.காரணம் நான் இவளாக இருக்குமோ என்று ரசித்த பெண் அதே நடையில் அலைபேசி இன்றி நடந்து , என்னை கடந்தும் போய்விட்டால்.
என்னவளின் அழைப்பை எடுத்த எனக்கு மேலும் ஓர் அதிர்ச்சி.அவள் வரவில்லையாம்.அழுதுகொண்டே கூறுகிறாள்.
நான் என்ன செய்வது " என்ன ஆச்சு டா" என்றேன்
வீட்ல "அம்மா போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க" என்றால் அழுதுகொண்டே
"அட லூசு , இதுகெல்லாம அழுகறது" விடு இன்னொரு டைம் பாத்துக்கலாம்.
உண்மைய சொன்ன நான் இன்னும் கிளம்பவே இல்ல , இனி தான் கிளம்பனும் உன்கிட்ட என்ன சொல்றதுன்னு யோசுசிட்டு இருந்தேன் , அதுக்குள்ளே நீயே கால் பண்ணிட்ட" என்று கண்களில் நீர் தேங்க கூறினேன்.
"அம்மா வந்துட்டாங்க , நான் அப்புறம் கால் பண்றேன்" என்றவுடன் அழைப்பு துண்டானது.
"சரி , வேறு என்ன செய்வது கிளம்பலாம்" என்று நகர்ந்தேன்.
நான் பில் கட்ட வருவதை பார்த்த அந்த முதலாளி சிறிதே புன்னகைத்தார்.
என்னவளின் முதல் முகம் இன்னும் அறிமுகம் இல்லாமல் தொடர்கிறதே என்ற வருத்தத்தில் , நானும் சோக புன்னகையை உதிர்த்து விட்டு வெளியே நகர்ந்தேன் .
நான் ரசித்த பெண்ணும் அவளின் காதலனுக்காக காத்திருப்பில் வாயிலையே பார்த்துகொண்டிருந்தாள்.
Comments
Post a Comment