பேருந்துநிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருக்கிறேன்.நான் வந்து இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது.
நினைவிருக்கிறது , அருண் ஐஸ்கீரிம் கடையின் ஓரம் தான் என் கால்கள் காத்துகொண்டிருந்தது.
ஆங்காங்கே சில இளைஞர்களின் கண்கள் என் உடலை ஊடுறுவிபார்த்தது.
பள்ளிசெல்லா குழந்தைகள் பலபேர் பட்டத்தை பறக்கவிடாமல் இறுக்கிபிடித்து கொண்டிருந்தினர்.
அவ்வப்போது அங்கிருந்த ஆட்டோகாரரின் குரல் வேறு என் மனதை இடையூறு செய்துகொண்டே இறுந்தது.
பூ விற்கும் பாட்டியிடம் பேரம் பேசிய நாகரீக பெண்ணொருத்தி என்னை பார்த்துகொண்டே கடந்து சென்றாள்.
இந்த அனுபவம் புதிதுதான் இதற்குமுன் நெடுநேரம் யாருக்காகவும் காத்திருந்தது இல்லை.இது போன்ற வலியுடன் , சுகம் நிறைந்த உணர்ச்சியை இன்றுதான் முதல்முறை உணர்கிறேன்.
பள்ளி காதல் முதல் , பருவ காதல் வரை அனைவரும் இளைப்பாரும் அரியதொரு இடம்தான் இந்த பேருந்து நிறுத்தம்.
பல காதல்களை விழுங்கியும் உள்ளது.சில காதல்களை வாழவைத்தும் உள்ளது.
சரி நான் ஏன் காத்திருக்கிறேன் அதுவும் தனிமையில் இவ்வளவு நேரமாக ,
காரணம் இருக்கிறது , இன்று தான் அவனை முதல்முறை பார்க்க போகிறேன்.
மனதிற்குள் ஏதோ ஒரு மத்தாப்பு.வண்ண வண்ண நிறங்களில் வரிசைகட்டி பூத்தது.
வங்காளவிரிகுடா அலைகலெள்ளாம் அன்று தான் என் மன ஓட்டத்தில் வந்து சென்றது.
அவனை காண வேண்டும் என்ற ஆசையில் என் கால்கள் சுகமாய் உள்ளது. ஆனால் இடைவிடாது ஊடுறுவிகொண்டிருக்கும் அந்த இளைஞனின் கண்கள் மட்டும் தான் எனக்கு இப்போது வலியாய் உள்ளது.
இது என்னவனுக்கான உடலாயிற்றே , வஞ்சகன் வைத்த கண் எடுக்காமல் இப்படியா பார்ப்பது , மனதிற்குள் திட்டி கொண்டேன்.
நேரம் நெருங்க நெருங்க என் படபடப்பு அதிகமானது.காய்ந்திருந்த கூந்தல் கூட மீண்டும் ஈரமாக துவங்கியது.
கடைசி முறை பார்ப்பதாக கூறி , அவனை காக்க வைத்த போது அவனும் இதே படப்படபோடு தான் இருந்திருப்பான்.
நிச்சயம் , என்னால் உணரமுடிகிறது. ஆனால் இன்னும் காத்துகொண்டுதான் இருக்கிறேன் , அவனை காண
ஐயோ அவன் எப்படி இருப்பான் , வெள்ளையா , கருப்பா , ஒல்லியா , குண்டா எதுவும் தெரியாது எனக்கு.கிராதகன் ஒரு புகைப்படத்தை கூட இதுவரை அனுப்பவில்லை.
காலையிலேயே கால் செய்தான் , என்ன கலர் டிரெஸ் போட்டுட்டு வர என்று
நானும் கண்டிப்பாக கூறிவிட்டேன் வெள்ளை நிற சட்டையில் தான் , வர வேண்டுமென்று , அவன் சொன்ன சிவப்பு நிற சுடிதாரில் , தலைநிறைய மல்லிகை பூவோடு நான் அவனை எதிர்பார்த்து.
தீடிரென்று அலைபேசி அலறியது. ஆம் அவனின் நம்பர் தான் வந்துவிட்டான் போல , என்ற ஆர்வகளிப்பில் ,
"எங்கடா இருக்க" என்றேன்.
"இல்ல டா , அது வந்து அது வந்து " என்று வார்த்தையை விழுங்கினான்.
"ஏன்டா , என்ன ஆச்சு , ஆர் யூ ஆல்ரைட் "
"வீட்ல கொஞ்சம் வேலை , சொந்தகாரங்க நிறைய பேர் வந்திருங்காங்க , நானும் எவ்வளவோ டைம் கேட்டுபாத்துட்டேன் , வீட்ல இப்ப போக வேணாம்ன்னு சொல்ராங்க " என்றான் தயங்கி தயங்கி
"டேய் , கிறுக்கா இத சொல்ரதுக்கா இப்படி பம்புர , சரி விடு இன்னொரு டைம் பாத்துகலாம் "
"எங்க , இருக்க" என்றான்
"இங்க , பஸ் ஸ்டான்ட் பக்கத்துல இருக்கிற ப்ரன்ட் வீட்ல , இப்ப தான் வந்தேன்"
"ஏதும் கோபம் இல்லையே "
"டேய் லூசு , அதெல்லாம் ஒன்னுமில்ல , போய் என் அத்தை சொல்ர வேலைய ஒழுங்கா பாரு "
"சரி டீ " என்று சிரித்தவாரே தொடர்பை துண்டித்தான்.
நான் செய்வதறியாது விழிகளுக்குள் நீரை நிரப்பி கொண்டு , கனவு கலைந்தவள் போல் அங்கிருந்து நகர்ந்து சென்றேன்.
என் எதிரே என்னை ஊடுறுவிபார்த்தவன் அவன் காதலியோடு உறவாடி கொண்டிருந்தான்.
சிரிப்பை மட்டும் உதிர்த்தபடி காணாத என்னவனை கற்பனையில் வரைந்து கொண்டே தொடர்கிறது என் பயணம்.
Comments
Post a Comment